மர்ம விலங்கை கண்காணிக்க வைக்கப்பட்ட கேமராவில் மரநாய் உருவம் தெரிந்தது
" alt="" aria-hidden="true" />
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள மணவாளக்குறிச்சி பகுதியில் மர்ம விலங்கு ஒன்று ஊர்க்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சிலுவைமுத்து என்பவருடைய வீட்டின் முன் கட்டியிருந்த 2 ஆடுகளை கடித்து கொன்றது. இந்த சம்பவம் நடந்த மறுநாள் வான்கோழியையும் வேட்டையாடியது.
இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து வனத்துறையினர் மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்படி மணவாளக்குறிச்சி பகுதியில் ஆங்காங்கே 4 கூண்டுகள் வைக்கப்பட்டன. அதில் ஒரு கூண்டில் ஆடும் கட்டப்பட்டிருந்தது. ஆனால் 3 நாட்கள் ஆகியும் மர்ம விலங்கு சிக்கவில்லை.
மரநாய்
இந்த நிலையில் மர்ம விலங்கு நடமாட்டம் ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்டறிய வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அதில் மரநாய் உருவம் பதிவாகி இருந்தது.
இதுபற்றி வேளிமலை வனச்சரகர் மணிமாறனிடம் கேட்ட போது மரநாய் ஆட்டை வேட்டையாட வாய்ப்பில்லை. ஆனால் அவ்வாறு வேறு விலங்குகள் வேட்டையாடி மீதம் விட்டு சென்ற மாமிசத்தை தின்று விட்டு செல்லும். எனவே ஆடுகளை வேட்டையாடியது தெருநாய்களாகவும் இருக்கலாம் என்றார்.
அப்படியானால் ஆடுகளை வேட்டையாடிய விலங்கு எது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.