வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை - டிரம்ப் அதிரடி


" alt="" aria-hidden="true" />

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உருவான உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் ஆரம்பத்திலேயே அமெரிக்காவுக்கு பரவியது.

 

எனினும் அப்போது வெகு சிலருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சில நாட்களிலேயே அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

 

ஆனால் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவ தொடங்கியது. அங்கு தினந்தோறும் சுமார் 100 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில், உயிரிழப்புகளும் ஏற்படத்தொடங்கின.

 

அந்த வகையில் அங்கு இதுவரை 38 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் 1,135 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

அந்த வகையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனா மற்றும் இந்த கொடிய வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய டிரம்ப் நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 30 நாட்களுக்கு பயணத்தடை விதிக்கப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

 

அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் குறித்து வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு டிரம்ப் உரையாற்றியபோது ஐரோப்பாவின் 26 நாடுகளுக்கான பயணத்தடை அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

 

சீனாவுக்கு வெளியே கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடாக ஐரோப்பிய நாடான இத்தாலி உருவெடுத்துள்ள நிலையில் அமெரிக்காவில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

வலிமையான மற்றும் அவசியமான இந்த பயண தடை இன்று (வெள்ளிக்கிழமை) அமலுக்கு வருவதாகவும், அதே சமயம் இந்த தடை இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துக்கு பொருந்தாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

கொரோனாவை வெளிநாட்டு வைரஸ் என குறிப்பிட்டுள்ள டிரம்ப், சீனா மற்றும் பிற கொரோனா பாதித்த நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையால், அமெரிக்காவில் வைரஸ் பரவும் வேகம் குறைந்ததாக கூறியுள்ளார்.

 

மேலும் அவர் கொரோனா வைரசை எதிர்த்து போராட அமெரிக்காவை போன்று ஐரோப்பிய கூட்டமைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

 

டிரம்ப் ஆரம்பத்தில், இந்த பயண தடை ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் மிகப்பெரிய அளவிலான வர்த்தகம் மற்றும் சரக்குகளுக்கும் பொருந்தும் என கூறினார். ஆனால் பின்னர் அவர் வர்த்தகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.

 

அந்த பதிவில் அவர் ஆட்களுக்குத்தான் தடையே ஒழிய சரக்குகளுக்கு அல்ல என்பதால் ஐரோப்பாவுடனான வர்த்தகம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் சீனா மற்றும் தென்கொரியாவில் உள்ள நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அங்கு நிலைமை மேம்பட்டால் பயண தடையை விலக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

 

இதற்கிடையே நேர அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், ஊதியத்துடன் கூடிய நோய் விடுப்பு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



Popular posts
மருங்கூர் VM கேஷ்யூஸ் நிறுவனர் தொழிலதிபர் திரு வீரவிஸ்வாமித்தின் அவர்கள் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரைச்சாவடி கிராமத்தில் இரண்டு கால்களையும் இழந்த ஊனமுற்றோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளித்து இரு மாணவர்களின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்
Image
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக 43 வீடுகள் சேதம் அடைந்ததை பார்வையிட்ட பஞ்சாயத்து தலைவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கினார்
கூடலூர் நகராட்சியில் கொரோனா விழிப்புணர்வுக்காக காய்கறிகள் பழங்களை கொண்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்
Image
கொரோனா வைரஸ் காரணமாக உணவு கிடைக்கவில்லை; ஒரு வாழைப்பழத்துக்காக மோதிக்கொண்ட நூற்றுக்கணக்கான குரங்குகள்
Image